சனி, ஜூன் 13, 2015

ஒப்பற்ற மகான்


புராதன வேதாந்தக் கருத்துகள் தற்கால மக்களுக்கும் நன்கு விளங்கும் வகையில் நவீன பாணியை சுவாமி விவேகானந்தர் கடைப்பிடித்தார். காலத்தால் அழியாத தத்துவங்களை உலக நாடுகளில் அவர் பரப்பினார்.
சநாதன தர்மமான ஹிந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை சுவாமிஜி விளக்கினார். இதன்மூலம் ஹிந்து மதத்தின் பல்வேறு உட்பிரிவுகளையும், நவீனப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் ஹிந்து மதம் உயிர்த் துடிப்பற்ற ஒன்றாக இருந்தது. அவர் அதற்குப் புத்துயிரூட்டி, அதை சக்திமிக்க ஒன்றாக ஆக்கினார்.
இறைவன், படைப்பு, மனிதன் மற்றும் இதர ஜீவராசிகள் ஆகியவற்றைப் பற்றி வேதாந்தத்தில் கூறப்பட்டவை, நவீன விஞ்ஞான ரீதியாகவும் முரண்பாடின்றி, இசைவாகவே உள்ளன என்பதையும் நிரூபித்தார்.
உதாரணமாக, பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு மூலகாரணமாக ஒரு சக்தியுள்ளது. அது என்றும் அழியாத ஒன்றாக விளங்குகிறது என்று வேதாந்தம் கூறும். அந்தச் சக்தியை அழிக்கவோ, புதிதாக உருவாக்கவோ முடியாது. அதன் வெளிப்பாடுகளை மட்டுமே நாம் மாற்ற முடியும் என்று விஞ்ஞானம் கூறும்.
உயிரினங்களுக்கு அடிப்படையானது செல். ஒரு செல் உடைய அமீபா ஒரு நுண்ணுயிர். இது தானாகவே தன்னைப் பல கூறுகளாக்கிக் கொண்டு வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் உடையது என விஞ்ஞானம் கூறும்.
பல செல்களின் தொகுப்பே பல்வேறு ஜீவராசிகள் என்கிறது அறிவியல்.பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தோன்றும் முன்பு, பிரம்மம் என்ற பேருணர்வு ஒன்று மட்டுமே இருந்தது. இது தன்னுள் உள்ள சக்தியைக் கொண்டு இந்த உலகமாகத் தன்னை சிருஷ்டித்துக் கொண்டது; படைப்பிற்கு மூலகாரணம் ஒரு சக்தி என அறிவியல் ஏற்பதை, இறைவன் என்கிறது வேதாந்தம்.
மனிதன் தெய்விகமானவன்; அவனுள் உறைந்துள்ள அந்த இறைத்தன்மையை வெளிப்படுத்தி, குறை ஏதுமில்லாத, பூரணமான மனிதனாக்குவதற்கு அவனுக்கு நான்கு வித யோகமுறைகளை சுவாமிஜி போதித்தார்.
புலன் இன்பங்களில் மூழ்கி, மக்கள் முறையற்று வாழ்ந்தனர். பொருள்களின் மீது அளவற்ற பற்றுடன், பொருளீட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இதனால் ஆன்மிகமே இல்லாத வாழ்வை மேற்கொண்டிருந்தனர்.
உலகப் பற்றுமிக்க, பொருள்முதல்வாதக் கொள்கைக்கு மாறாக ஆன்மிகத்தைப் போதித்த சுவாமிஜி, பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு மூல காரணம் எங்கும் நிறைந்த, ஆதி அந்தமில்லாத பிரம்மம் அல்லது பேருணர்வேயன்றி, பருப்பொருள் எதுவுமல்ல என நிரூபித்தார். அப்பேருணர்வு தான் பருப்பொருள் அனைத்தையும் படைத்துத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதேயன்றி அது பருப்பொருளால் தோற்றுவிக்கப்பட்டதல்ல என்றார்.
எதிர்காலத்தில் உலகிற்கே ஓர் உன்னத ஆன்மிகக் குருவாக இந்தியா விளங்கும் என்று தீர்க்கதரிசனத்துடன் கூறினார். அது மட்டுமல்ல, வேதாந்தத்தின் போதனைகளையும், லட்சியங்களையும் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொண்டு, அதன்மூலம் எல்லா உயிரினங்களின் நலனையும் உள்ளடக்கிய ஓர் உன்னத வாழ்வுமுறை மேலைநாடுகளில் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
இத்தொடர்பின் மூலம் மேலைநாடுகளின் விஞ்ஞான அறிவும், தொழில்நுட்பமும் இந்தியாவில் பரவி, இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். அதே சமயம் ஆன்மிகம் போதிக்கும் பக்தியும், நல்லியல்புகளும் இந்தியாவிலிருந்து மேலைநாடுகளில் பரவி, அங்கு குடும்பங்களிலும், சமூகத்திலும், நாட்டிலும் மனித உறவுகள் சீரழியும் போக்கைத் தடுக்கும்.
சுவாமிஜியின் வாழ்க்கையை சற்று ஆராய்ந்தால் நாம் இதுவரை அவரைப் பற்றிக் கூறிய யாவும் உண்மை என்பது விளங்கும்.
சுவாமிஜிக்கு ஐந்து வயதில் ஒருமுறை தியானத்தில் புத்தரின் தரிசனம் கிடைத்தது. சுவாமிஜி ஸ்ரீ ராமகிருஷ்ணரை முதல்முறை சந்தித்தபோதே அவர், புராணங்களில் கூறப்படும், பிறப்பறுத்த பிரம்மஞானியான நரனின் அவதாரம் என ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு விளங்கியது.
அதோடு, ஓர் ஆன்மிக அனுபவத்தின் மூலம் மனிதகுல இன்னல்களைக் களைந்து, சத்மார்க்கத்தை உபதேசிக்க விரும்பியே அவர் அவதரித்துள்ளார் என்பதையும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் உணர்ந்தார்.
நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்தபோது சுவாமிஜிக்கு மிக உன்னத ஆத்மஞானம் கிட்டியது. அப்போது அவருக்கு வயது இருபது தான். சுவாமிஜி உலக பந்தங்களை அறுத்து பிரம்மஞானம் அடைந்ததால் உடலைத் துறக்காமல், மக்களுக்குச் சேவை புரிய வேண்டும் என்பதில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தீவிரமாக இருந்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும், நரேனுக்கும் இடையே நிலவிய உறவு சாதாரண குரு – சீடன் உறவாக இல்லை. சாதாரணமாக, சீடன் செய்யும் எந்தச் சேவையையும் சுவாமிஜி தனக்குச் செய்வதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அனுமதித்ததில்லை. தான் பயன்படுத்திய ஹுக்காவையே நரேனும் பயன்படுத்த வேண்டும் என்று பகவான் வற்புறுத்துவார். நரேந்திரர் தயங்கினால், எந்தப் பரம்பொருள் உன்னில் உள்ளானோ அவனே என்னிலும் உள்ளான் என்பார்.
அன்னை காளியிடம் எந்த உலகாயத உதவிக்காகவும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் வேண்ட மாட்டார். ஆனால் நரேனின் குடும்பம் வறுமையில் வாடியபோது அத்துன்பத்திலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என காளியிடம் அவர் பிரார்த்தித்தார். நரேனுக்காகப் பிச்சை எடுக்கவும் தயார் என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மறைவிற்குப் பிறகு ஸ்ரீ சாரதா தேவி இரண்டு தெய்வீகக் காட்சிகளைக் கண்டார். அவற்றின் மூலம் நரேனின் உடலில் இருந்துகொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணர் செயல்படுவார் என்று அன்னை அறிந்துகொண்டார்.
இதுபற்றி சுவாமி ராமகிருஷ்ணானந்தருக்கு, தமது கடிதத்தில் சுவாமிஜியே என் உடல் இருக்கும்வரை, இவ்வுடலில் இருந்து கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணர் தான் செயல்படுகிறார் என்பதை நினைவில் கொள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி பிரம்மானந்தர்
சுவாமி பிரம்மானந்தர்
சுவாமி விவேகானந்தர் மஹாசமாதி அடைவதற்கு ஒரு மாதம் முன்பு சுவாமி பிரம்மானந்தருக்கு ஓர் அதிசயத்தக்கக் காட்சி கிடைத்தது. விவேகானந்தரைப் பார்க்கும்போதெல்லாம் சுவாமிஜியின் உடலைச் சுற்றி, தன்னுள் அணைத்துக் கொள்வதுபோல் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உருவம் தோன்றுவதை சுவாமி பிரம்மானந்தர் கண்டு அதிசயித்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் தம்மிடம் ஓர் உன்னதமான லட்சியத்தை ஒப்படைத்துள்ளார் என்று சுவாமிஜி கூறுவார். இந்திய மக்களிடையே ஆன்மிக விழிப்பை எழுப்பி அதன்வாயிலாக உலகிற்கே குருவாக விளங்குமாறு இந்தியாவை உருவாக்க வேண்டும்; ஸ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசித்த, உலக மக்கள் அனைவராலும் கடைபிடிக்கத்தக்க நடைமுறை வேதாந்தக் கருத்துகளை, தான் பரப்ப வேண்டும் என்பவையே அந்த லட்சியங்கள்.
மனிதனுள் உறையும் இறைவனை வழிபடுவதாலேயே அவனுள் நிறைந்துள்ள தெய்வத்தன்மையை வெளிப்படுத்த முடியும் என்றும், பல மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்க அது ஒன்றே வழி என்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறினார். மதம் என்பது வெறும் ஒரு நம்பிக்கையல்ல, அனைத்திற்கும் ஆதாரமாக உள்ள இறைவனை அடைவதே அதன் லட்சியம் என அவர் போதித்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் இந்தச் செயல்முறை வேதாந்தத்தைத் தான் 1893, செப்டம்பர் 11ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சிகாகோ சர்வசமயப் பேரவையில் சுவாமிஜி முழங்கினார்.
மேலைநாடுகளின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பமும் மக்களுக்குப் பல வசதிகளை மட்டுமே தர முடியும் என்றார் அவர். ஆனால், நான், இந்த உடல் அல்ல, ஆதி அந்தமில்லாத, அழிவற்ற ஆத்மாவே என்ற ஆன்ம ஞானம் ஒன்று தான் மனிதனைத் தளைகளற்றவனாக, துணிவுள்ளவனாக மாற்றும் என்றார் அவர்.
சக மனிதர்களிடத்தில் இத்தகைய பேதமற்ற அன்பைச் செலுத்தாவிட்டால், விஞ்ஞான வளர்ச்சியாலும், தொழில்நுட்ப மேம்பாட்டாலும் பெறப்படும் வசதி, அதிகாரம், பலம் போன்றவை மனித குலத்திற்கு அபாயத்தையே தரும் என்றும் சுவாமிஜி எச்சரித்தார்.
ஒரு சாதாரண குருவின் ஆன்ம பலத்தை, ஒரு மின்கடத்தி மூலம் ஒரு சில 1000 வாட் பல்புகளை ஒளிர வைக்கும் சக்திக்கு ஒப்பிடலாம். ஆனால் அவதாரமான சுவாமிஜியின் ஆன்மிக சக்தியோ எந்த மின்கடத்தியுமின்றி, எல்லையற்ற வெளியில் சென்று லட்சக் கணக்கான பல்புகளை ஒளிரச் செய்யக்கூடியது.
சர்வ சமய மாநாட்டில் சுவாமிஜியின் உரையைக் கேட்டுக் கூடியிருந்த ஆயிரக் கணக்கான இளம்பெண்கள் அவரை வியந்து பாராட்டினர். அந்தப் பாராட்டுதல்களையும், மரியாதைகளையும் ஒரு குழந்தையின் கபடமற்ற தன்மையுடன் சுவாமிஜி ஏற்றுக் கொண்டதைக் கண்ட ப்ளாட்கெட் என்ற பெண்மணி வியந்து, உலகில் இறைவன் என ஒருவர் இருப்பாராகில் அவர் இந்த இளைஞனைத் தவிர வேறு யாருமில்லை என்றார்.
சுவாமிஜிக்கு இருந்த அளவற்ற ஆன்மிகச் சக்தி அவரது உரைகளில் வெளிப்படுவதைக் கண்டு சகோதரி கிரிஸ்டைன் என்பவர் இவ்வாறு தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்:
சுவாமிஜியின் உரைகள் அனைத்திலும் ஆதார ஸ்ருதியாக ஒலித்தது, இந்திய நாடு உலகிற்கு அளித்துள்ள இந்தப் புனிதமான தத்துவமே – மனிதன் இயல்பாகவே புனிதமானவன், ஆதியந்தமில்லாப் பூர்ணத்துவம் நிறைந்தவன். குறைபாடுகளற்ற இந்த முழுநிறைவு காலப்போக்கில் அவனால் பெறப்பட்டதல்ல. மாறாக அதுவே அவனது இயல்பு. அதாவது, மனிதனின் அந்தரங்கத்தில் ஒளிரும் பூரணமான இறைத்தன்மையும், சிருஷ்டிக்குக் காரணமான பிரம்மமும் ஒன்றுதான்.
அமெரிக்காவிற்குப் புறப்படும் முன் தமது சீடர் ஒருவரிடம் சுவாமிஜி இவ்வாறு கூறினார்:
துன்பத்தில் உழலும் மனித சமுதாயத்தைக் கண்டு என் மனம் மிக வேதனைப்படுகிறது…. சிகாகோவில் நடைபெற இருக்கும் ௪ர்வ சமய மாநாட்டிற்காகச் செய்யப்படும் எல்லா ஏற்பாடுகளும் எனக்காகவே செய்யப்படுகின்றன என்பதை நீ விரைவில் அறிந்துகொள்வாய்.
எப்படிப்பட்ட தீர்க்கதரிசனம் இது! அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்பது 1893, செப்டம்பர் 11-இல் நிரூபணமானது.
அன்றிலிருந்து உலகளாவிய சகிப்புத்தன்மை, எல்லா மதங்களையும் மதித்து ஏற்கும் பரந்த மனப்பான்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய மத அணுகுமுறை தோன்ற வழி வகுக்கப்பட்டது.
பல்வேறுபட்ட தத்துவங்கள் இருப்பினும் அவற்றினிடையே நிலவும் அடிப்படை ஒற்றுமையைக் காண்பதும், மனிதனுக்குச் செய்யும் சேவையை இறைவனுக்குச் செய்யும் சேவை எனும் மனப்பான்மையுடன் அவர்களிடம் உள்ள அந்த இறைத்தன்மையை வெளிப்படச் செய்வதும்தான் இப்புதிய மதத்தின் அணுகுமுறை கோட்பாடுகள்.
Vivekanandacrop
ஆன்மிக ஒளியை இந்தியாவிலிருந்து பெறுவது அவசியம் என்ற விழிப்புணர்வு அன்றிலிருந்துதான் மேல்நாட்டினரிடம் தோன்றியது. இந்த ஆன்மிக ஞானம் உலகளாவிய நல்லிணக்கம் மற்றும் அமைதி ஆகியவற்றை வலியுறுத்தியது.
பிறருக்கில்லாத தனிப்பட்ட உரிமைகளைக் கோருவது, எல்லை மீறிய மதவெறி ஆகிய வேலிகளைத் தகர்த்தெறிய வேண்டும் என்று போதித்தது.
மேலைநாட்டு மக்களுக்குத் தமது ஆன்மிகக் கருத்துகளை எழுச்சிமிக்க உரைகள் மூலம் பரப்பியதோடு, தாய்நாடு திரும்பிய பிறகும் உலகமெங்கும் அதைப் பரப்பும் விதத்தில் சுவாமிஜி பயிற்சி அளித்தார். இதனால் மேலைநாட்டினர் இந்திய மக்களை மதமாற்றம் செய்வதைத் தடுத்து நிறுத்தினார். இவ்வாறு தனிமனிதராக சுவாமிஜி இந்திய மற்றும் உலக சரித்திரத்தின் போக்கை மாற்றினார்.
இறைவன் மற்றும் ஆன்மாவைப் பற்றி ரிஷிகள் நேரிடையாக அறிந்த உண்மைகளையே அடிப்படையாகக் கொண்டது வேதாந்த மதம் என்று சுவாமிஜி கூறினார். வேதாந்தம் எந்த ஒரு மூட நம்பிக்கையையோ, அறிவுக்கு ஒவ்வாத கொள்கைகளையோ, கோட்பாடுகளையோ போதிக்கவில்லை என்றார் அவர்.
அது மட்டுமல்ல, அறிவியலும் வேதாந்தமும் ஒன்றுக்கொன்று இணக்கமானவையேயன்றி முரண்பட்டவை அல்ல என்றும் அவர் கூறினார்.
உதாரணமாக, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு குறைபாடு உள்ளது, முழுமையானது அல்ல என சுவாமிஜி விளக்கினார். மனிதன் மேன்மேலும் உன்னதமாகி, முடிவில் இறைவனாகவே மாறுவான் என்றும், இறைவனோ தனது சங்கல்பம் மற்றும் இச்சைப்படி உயிரணுவாக, பிறகு மூலக்கூறாக முடிவில், சிருஷ்டியில் உள்ள அனைத்துமாக வியாபிக்கிறான் என்றும், வேதாந்தத்தின் கருத்துப்படி தொடக்கமும் முடிவும் இல்லாத இந்தச் சுழற்சி நடந்து கொண்டே உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கு மாற்றான கொள்கையான ஒரு ஜடப்பொருளிலிருந்து பேருணர்வான ஆத்மா தோன்றியது என்பதை நிரூபிக்குமாறு விஞ்ஞானிகளிடம் கூறினார் சுவாமிஜி.
வேதாந்தத்தின் நோக்கில், உலகியல் கல்வித்திட்டம் (அபராவித்யை) ஆன்மிகக் கல்விக்கான (பராவித்யை) அறிமுகம்தான் என்றும், உலகியல் கல்வியும் ஆன்மிகக் கல்வியும் இணைந்ததே முழுமையான, உண்மையான கல்விமுறை என்றும் அவர் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட  தொழில் மற்றும் பண்புகள் படைத்த மக்கள் கூட்டத்தை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகக் கருதும் முறை உலகளாவிய ஒன்று என்றும் அதற்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் அவர் கூறினார்.
‘ஒருவரின் தொழில், அவரது பண்பு ஆகியவற்றைப் பொருத்தே அவரது ஜாதி நிர்ணயிக்கப்படுகிறது’ என்று கீதையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆகவே தவறான புரிதலால் உருவான ஜாதிப்பிரிவுகள் மறைய வேண்டும் என்று கூறிய சுவாமிஜியின் காலத்திலேயே அத்தகைய மனப்பான்மை மறையத் தொடங்கியது.
உலக சரித்திரத்தின் போக்கை நன்கு கற்ற சுவாமிஜி, நாடுகளை மதகுருக்கள், படைவீரர்கள் மற்றும் வியாபாரிகள் ஆண்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது, இனி உலக நாடுகளைச் சாதாரண குடிமக்கள் தான் ஆட்சி செய்வர் என்ற முடிவுக்கு வந்தார்.
எதிர்காலத்தில் ரஷ்யாவிலும், சீனாவிலும் சர்வாதிகார மன்னராட்சி முடிவுக்கு வந்து, பொதுவுடைமை அரசு அமையும் என்று தமது தீர்க்கதரிசனத்தால் 1897-ம் வருடமே சுவாமிஜி கூறியதைப் போலவே, பின்னாளில் நடந்ததைக் கண்ட பலரும் பெரும் வியப்புற்றனர்.
புராதனமான தனது ஒழுக்கம் மற்றும் ஆன்மிகப் பண்பாடுகள் ஆகியவற்றைக் கைவிடாமல் பின்பற்றினால் இந்தியா மேலும், மேலும் உயர்ந்து நிற்கும், ஏதோ சில காரணங்களால் அதைச் செய்யத் தவறினால் இந்தியா மூன்று தலைமுறைகளுக்குள் அழிந்து போகும் என்று எச்சரித்தார் சுவாமிஜி.
சுவாமிஜி பேசியவை அவரது ஞானத்தின் வெளிப்பாடுதான். அவரது சொற்கள் சக்தி மிகுந்தவை. அதனால் கேட்பவர்களின் வாழ்வில் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தின.
மனதை வலுப்படுத்துவதற்கு பிரம்மச்சரியம் ஒன்றுதான் மிகச் சிறப்பானது என அவர் போதித்தார். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு, பெண்கள் அனைவரையும் தனது தாயாகவே ஒருவர் கருத வேண்டும். அப்போதுதான் மனம் தூய்மை அடைந்து வலுவடையும் என்றார்.
பிரம்மச்சரியம் என்பது இயற்கைக்கு முரணானது என்றும், அது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் சிலர் கூறினர்.
அதைக் குறிப்பிட்ட சுவாமிஜி, பிரம்மச்சரியம் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? இந்தியாவில் ரிஷிகள் பலரும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அதைப் பரிசோதித்து, நடைமுறையில் கடைபிடிப்பதால் பல நன்மை கிட்டும் என்று அறிந்துள்ளனர் (Reminiscences of Swami Vivekananda – பக்கம் 428) என்றார்.
அப்போது அரங்கில் இருந்த மருத்துவர்கள் எவரும் இதற்கு எதிராக ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை.
மனிதன் இயற்கையிலேயே புனிதமானவன் என்பதை சுவாமிஜி மிகத் தீவிரமாக நம்பினார். ஆகவே, அவர் ஒரு சமயம்,  ‘தவறுக்கு வருந்துவதை நிறுத்துங்கள், நிறுத்துங்கள். பாவம் செய்துவிட்டோம் என்ற மனபாரத்தைத் தூக்கி எறியுங்கள், நீங்கள் எவ்வித களங்கமுமற்ற ஆத்மஸ்வரூபம் என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் தூயவர்கள். நீங்கள் பாவம் செய்தவர்கள் என்று கூறுபவர்கள் தெய்வநிந்தனை செய்பவர்கள்’ (Reminiscences of Swami Vivekananda – Page 429) என்றார்.
இயற்கையுடன் இணங்கிப் போவது என்ற கருத்தை அவர் முற்றிலுமாக நிராகரித்தார். இந்தக் கருத்தை விளக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்:
விநோதமான ஏதோ ஒன்று நிகழ்கிறது. சிரியுங்கள் என்று இயற்கை கூறுகிறது. நாம் சிரிக்கிறோம். நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர் இறக்கிறார். அழுங்கள் என்று இயற்கை கூறுகிறது. நாம் அழுகிறோம்..அழுங்கள் என இயற்கை கூறும்போது முடியாது, நான் அழ மாட்டேன் என்று கூறுங்கள்.
சக்தி, சக்தி, சக்தி…. நீங்கள் எல்லையற்ற சக்தி படைத்தவர்கள், தூய்மையானவர்கள், சுதந்திரமானவர்கள். உங்களிடம் எவ்வித பலவீனமும் இல்லை, எவ்விதத் துயரமும் இல்லை, எவ்வித பாவமும் இல்லை.
இத்தகைய கருத்துகளுக்கு எடுத்துக்காட்டாக சுவாமிஜியின் வாழ்க்கை அமைந்ததால், உலகின் உன்னத குருமார்களின் வரிசையில் அவரும் வைக்கப்பட்டார்.
ஒரு சமயம் ராஜயோகம் பற்றிச் சொற்பொழிவு ஆற்றிய பிறகு கூடியிருந்த சிலருக்கு தியானம் செய்யும் முறையைப் பற்றிக் கூறுகையில், பிராணாயாமம் செய்கையில் உங்களது உடல் ஜ்யோதிமயமானது என்று எண்ணிக்கொள்ளுங்கள். மூளையின் அடிப்பாகத்திலிருந்து முதுகுத்தண்டின் அடிநுனிவரை மனக்கண்ணால் பார்க்க முயற்சிக்கவும். அதாவது உட்குழிவு உள்ள சுஷும்னா நாடி வழியாகக் குண்டலினிவரை காண்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இதற்குப் பிறகு குண்டலினி சுஷும்னா நாடி வழியாக மேல்நோக்கி வந்து மூளை வரை சென்றடைவது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்றார்.
இதே வழிமுறையைத்தான் சுவாமிஜியின் ராஜயோகத்தைப் பற்றிய ஆறு சொற்பொழிவுகள் என்ற நூலிலும் காண்கிறோம். ஒருவருக்குச் சிறிதளவு நம்பிக்கையும், சிறிதளவு பொறுமையும் இருந்தாலே அவருக்கு மிக உன்னதமான ஆத்மஞானம் கிட்டும் என்று கூறித் தமது உரையைக் கேட்க வந்திருப்பவர்களை சுவாமிஜி தூண்டி உத்வேகப்படுத்துவதைக் காண்கையில், நமக்கு மெய்சிலிர்க்கிறது.
சந்நியாசிகளுள் அரசன் போன்றவரும், அனைவரின் துயர்களையும் போக்குபவருமான ஞானி விவேகானந்தருக்கு நமஸ்காரங்கள்.
 பரதத்வே ஸதா லீனோ ராமக்ருஷ்ண ஸமாஜ்ஞயா |
யோ தர்ம ஸ்தாபனரதோ வீரேசம் தம் நமாம்யஹம்||
மேலான உண்மையில் எப்போதும் லயித்தவரும், தர்மத்தை நிலை நாட்டுவதில் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இணையானவருமான வீரேஸரைப் பணிகிறேன். (வீரேசம் – வீரேசுவரரின் ஆசியால் பிறந்தவர் விவேகானந்தர்)