வியாழன், டிசம்பர் 13, 2012




அன்புடையோர் வாழ்வில் இன்பம் அடைவது உறுதி.

* அண்ட சராசரங்கள் அனைத்தையும் நடத்தும் ஆற்றல் ஒன்று உள்ளது.
அந்த ஆற்றலையே இறைவன் என்றும்,
இயற்கை என்றும் கூறுகிறோம்.

ஒவ்வொரு மதமும் அந்த ஆற்றலை ஒவ்வொரு பெயரால் குறிப்பிடுகிறது.
பெயர் வெவ்வேறானாலும்,
அப்பெயர்களால் குறிப்பிடப்படும் இயற்கை ஆற்றல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.
இதனையே சமய உண்மைகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஆனால், சமயவாதிகள் தங்களுக்கும் மாறுபட்டு பகையை வளர்த்துக் கொள்கின்றனர்.

* ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று கூறி அலைவதெல்லாம் அறிவின்மையாகும்.
தூய்மையான அறிவுநிலையே தெய்வமாகும்.
அத்தெய்வநிலையை எட்டுவதற்கு காவித் துணியும், கற்றைச் சடையும் தேவையில்லை.
தூய அன்பு ஒன்றே துறவின் இலக்கணம்.

* இரவும் பகலும் மாறி மாறி வருவது போல,
உலகில் எதைத் தொட்டாலும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரத்தான் செய்யும்.
அறிவினால் துன்பத்தைத் தள்ளி, இன்பத்தை எடுத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.

* இறைவா! தேவாதிதேவனே!
இம்மண்ணில் உள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரஞ்செடி கொடிகள் அனைத்தும் துன்பம் நீங்கி இன்பம் பெற அருள்புரிவாயாக.
எல்லோரும் அன்பு வழியில் இணக்கமுடன் வாழ நீயே அருள்புரியவேண்டும்.

* தன்னைத் தானே கட்டுப்படுத்தி வாழ்தல்,
பிறருடைய துன்பத்தைப் போக்குதல்,
 பிறர் நலம் பேணுதல்,
இறைவனைப் போற்றுதல்
இந்நான்கு பண்புகளே ஒருவனுக்கு இன்றியமையாத கடமைகளாகும்.

* ஞானம் பெற விரும்புவோர் எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும்.